திங்கள், 20 மே, 2013

Fenugreek : வெந்தயம் - வெந்தயக் கீரை.


     நம் நாட்டில் வெந்தயக்கீரையின் மகத்துவத்தினை அனைவருமே அறிந்து இருப்பார்கள். கீரை வகைகளில் பலவகை உண்டு. அவற்றில் பலவகை மருத்துவ குணம் வாய்ந்தவைகளாக இருப்பது போல் வெந்தயக்கீரையிலும் சில மருத்துவ குணங்கள் உண்டு.

     நம்முடைய உடலில் ஏற்படும் நோய்கள் பெரும்பான்மையானவை நாம் சாப்பிடும் உணவுப்பழக்க வழக்கங்களில் மாற்றம் வரும்போதுதான் நோய்கள் உருவாகின்றன. சுத்தமில்லாத உணவு வகைகளை நாம் சாப்பிடும்போது அதிலுள்ள கிருமிகள் நம் வயிற்றுனுள் சென்று பல்வேறு பிரச்னைகளை உருவாக்குகின்றன.

வெந்தயக் கீரையின் சிறப்பு :

     வெந்தையக் கீரை ஒரு சிறந்த சத்துள்ள உணவு. உணவே மருந்து - மருந்தே உணவு என்ற நம் முன்னோர் வாக்குப்படி இக்கீரையும் ஒரு மருந்து. வெந்தயத்திற்கு மெந்தியம், மெந்தி, வெந்நெய் போன்ற பெயர்களும் உண்டு. வெந்தையச் செடியின் இலைகள் மட்டுமே நாம் உண்ணுவதற்கு ஏற்றவை. அதன் தண்டும் காயும் உணவாக பயன்தருவதில்லை.

தீரும் வியாதிகள் :

     காசநோய், சொறிசிரங்கு, கண்பார்வைக் கோளாறுகள், வயிற்றுவலி, மலச்சிக்கல், குடல் ரணம், வயிறு எரிவு, கடுப்பு, இடுப்பு வலி, பித்தக் கிறுகிறுப்பு, மார்பு வலி, மூச்சடைப்பு, உட்சூடு, வறட்டு இருமல், தலைசுற்றல், மூலநோய், உடல் வலியின்மை, வாய் ரணம், கட்டி, தொண்டை ரணம், ருசியின்மை, பசியின்மை, ஜீரண மந்தம், மாதவிடாய்க் கோளாறு, வாதநோய், மேகநோய், அக்கினி மாந்தம், வாயு, கபம் போன்ற பலவிதமான நோய்களுக்கு இக்கீரை சிறந்த மருந்து.

     வெந்தயக்கீரையைச் சுத்தம் செய்து பொரியல் செய்து உணவில் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய் சிறுகச்சிறுக அகன்றுவிடும். இக்கீரை சொறிசிரங்கையும், பார்வைக் கோளாறையும் நீக்கத் துணைபுரியும்.

     இக்கீரையுடன் கோழி முட்டை, தேங்காய்ப்பால் ஆகியவற்றைச் சேர்த்து, நெய்யில் தயார் செய்து உணவுடன் உண்டு வர இடுப்பு வலி நீங்கி, இடுப்பு வலிமை பெறும். மேலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய முடியாதவர்களும் இவ்வாறு சாப்பிடுவது நல்லது.

     இக்கீரையைச் சுத்தம் செய்து வேக வைத்து, அதற்கு ஏற்ற அளவு தேன் விட்டு கடைந்து சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். குடலில் காணும் ரணமும் குணமாகும். வயிற்றில் உளைச்சலும், எரிச்சலும் காணும்போது வெந்தயக் கீரையைச் சாப்பிட்டுவர வயிற்று உபாதைகள் நீங்கும்.


     இக்கீரையுடன் சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஆகிய மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து, அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து அருந்திவர மேற்கண்ட பிணிகள் நீங்கும். இது மூலநோய், குடல் ரணம் ஆகிய பிணிகளுக்கும் ஏற்ற மருந்தாகும்.

     இக்கீரையைச் சுத்தம் செய்து வதக்கி, அத்துடன் வாதுமைப் பருப்பு, கசகசா, கோதுமை இவைகளைச் சேர்த்து தேவையான அளவு பால் ஊற்றி நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இறக்கி கிண்டி சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட மேற்கண்ட ரணங்கள் ஆறும்.

     தேவையான அளவு வெந்தயக் கீரையை எடுத்து அம்மியில் வைத்து அரைத்து சூடு செய்து வீக்கங்கள் மீது பூச நாளடைவில் வீக்கம் தணியும். இவ்வாறு செய்வதனால் தீப்புண்களும் குணமடையும். இக்கீரையுடன் சீமை அத்திப்பழம் சேர்த்து அரைத்துக் கட்டிகளின் மேல் பற்றுப் போட அவை பழுத்து சீக்கிரம் உடையும்.

     மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்கள் வெந்தயக் கீரையை அதிக அளவில் உணவுடன் சேர்த்து உண்ண வேண்டும்.



இக்கீரையின் பொதுவான பண்புகள் :

     இக்கீரையை பருப்புடன் வேகவைத்து உண்பதே சாதாரணமாக பின்பற்றப்படும் வழக்கம். இது அஜீரணக் கோளாறுகளை எளிதாக அகற்றிவிடும். ஜீரண சக்தியை அதிகப் படுத்தி பசியைத் தூண்டும் சக்தி வெந்தயக் கீரைக்கு உண்டு.

     தொடர்ந்து வெந்தயக் கீரையைக் சாப்பிட்டு வரும் பட்சத்தில் நாள்பட்ட சொறி சிரங்கு, பார்வைக் கோளாறு ஆகியவை நீங்கும். ஒன்றுவிட்டு ஒருநாள் உணவோடு கீரையை எந்த விதத்திலாவது சேர்த்துக் கொள்வதைப் பழக்கப்படுத்திக் கொண்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.



     இக்கீரையை நீண்டகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய் சிறுகச்சிறுக அகன்றுவிடும் என்பதில் ஐயமில்லை.

     வெந்தயக் கீரை ஒரு சிறந்த சத்துள்ள உணவு. இருமலைக் கட்டுப்படுத்தும் தாகத்தைத் தணிக்கும். ஜீரணத்தை ஒழுங்குபடுத்தி உண்ட உணவை எளிதில் செரிக்க செய்யும். மலக்கட்டை நீக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் அஜீரணக் கோளாறு நீங்கி நல்ல பசி எடுக்கும். 

     பலவீனம், மந்த புத்தி, சோம்பல் இவைகளை மாற்றிவிடும். கண்பார்வையைத் தெளிவடையச் செய்யும். சிறந்த உணவாகவும், மருந்தாகவும் திகழும் இவ்வளவு பலனுள்ள கீரையை நம் வீட்டுத் தோட்டங்களிலும், வீடுகளிலும் பயிர் செய்ய முயற்சி செய்யலாமே? 

     அனைவருக்கும் இக்கீரையை பரிந்துரைக்கலாமே!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக